Wednesday 29 December, 2010

விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா?

ஒரு காலத்தில் மும்பை சென்று தங்கி பல நேர் காணல்களை(Inerview) சந்தித்து பெரும்பாடுப் பட்டு அரபு நாட்டு வேலைகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது.
அந்த நிலை மாறி விஜய(Visit) விசாவில் சென்றாலேப் போதும். வேலை வாய்ப்பு உறுதி என்கிற சூழல் துபை போன்ற நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.
விஜய(Visit) விசாவில் துபையில் முயற்சி செய்து உயர் பணிகளில் இருப்பவர்கள் ஏராளம். எப்படிப்பட்ட தயாரிப்போடு வந்தால் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்கிற வழிகாட்டுதல்களை பலரும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
சமீப காலமாக துபையின் நிலைமை மாறி வருகிறது. அரசுத் துறைச் சார்ந்த செலவுகளில் துவங்கி செலவுகள் அனைத்தும் உயர்ந்த வண்ணம் உள்ளன. பள்ளி ஏழாம் வகுப்பு மாணவருக்கு ஆகும் ஒரு மாத செலவு ரூபாய்.11,000.00. நமதூரில் குடும்ப செலவை தாராளமாகப் பார்த்துவிடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக விண் நோக்கி சென்று கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட்! ஒரு வருடத்திற்கு தங்குமிடத்திற்கு ஆகும் செலவில் நம் தாய் மண்ணில் ஒரு சொத்து வாங்கி விடலாம்.
நாளுக்கு நாள் வெளி நாட்டவருக்கு எந்த விதத்திலும் அணுகூலமற்ற சட்ட திட்டங்களும், அனைத்து சூழ்நிலைகளும் மறைமுகமாக நம்மை நம் நாட்டிற்கு விரட்டுகின்றார்களோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது.
சமீபத்தில் அனைத்து அரபக ஊடகங்களிலும் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் விசிட் விசா பிரச்சனையைப் பற்றித் தெரிந்துக் கொண்டால் விசிட் விசாவில் வரக் கூடியவர்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
* விசிட் விசாவில் வருபவர்கள் யாரும் Employment விசாவிற்கு மாறாமல் வேலை செய்வதும், வேலைக்கு அமர்த்துவதும் சட்ட விரோதமாகக் கருதப் படுகிறது. இருந்தாலும் இதுவரை அரசாங்கம் கண்டு கொள்ளாமல்தான் இருந்தது. ஆனால், தற்போது வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு 50,000.00 திரஹம் (சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்)அபராதம், வேலை செய்பவருக்கு வாழ் நாள் முழுவதும் வர முடியாத (Life Ban) தடை என்று இந்த சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது.
* விசிட் விசாவில் வந்து வேலைத் தேடுவதற்கு எந்தவித சட்ட சிக்கலும் இல்லை.புதிதாக விசிட் விசாவில் வர எண்ணுவோர் விசிட் விசாவில் இடப்படும் Profession Business Man என்று இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படி Business Man என்று விசாவில் குறிப்பிடப்பட்ட ஒருவர் தக்க சான்றுகள் காண்பிக்க முடியாமல் அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றார்.
இன்றைக்கு உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியாவில் தொழில் துவங்குகின்றன. மிகப் பெரிய வேலை வாய்ப்பு சந்தையாக நம் தாய் மண் விரைவாக மாறி வருகிறது.
இளையத் தலைமுறையினர் முடிந்த அளவு இந்தியாவிலேயே நிறைவான ஊதியம் தரும் நிறுவனங்களில் வேலையில் சேர முயற்சி செய்யுங்கள். அதையும் மீறி வெளிநாட்டு ஆசை உங்களுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் வெளிநாட்டில் சம்பாதிக்கும் காலத்தை குறைவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள். போலித்தனமாக வாழ்கிறோமே என்று அன்றாடம் புலம்பிக் கொண்டிருக்கும் எண்ணற்ற அயல்நாடு வாழ் சகோதரர்களின் ஆவலுக்கேற்ப நீங்களாவது முழுமையான வாழ்வை நம் தாய் மண்ணில் சொந்த பந்தங்களுடன் வாழ்வதற்கு ஏதுவாக திட்டமிடுங்கள்.
நன்றி: கடையநல்லூர்.org