Wednesday 10 August, 2011

பொக்கிஷங்கள்


1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

நன்றி:பொக்கிஷங்கள்.காம்





தரமான கல்வி எல்லோருக்கும்

தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவான பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக, 2006-ம் ஆண்டு முதலாகத் தொடர்ந்து குரல் கொடுத்தது மற்றும் வழக்குத் தொடுத்ததில் பொதுவுடைமைக் கருத்துச் சார்புள்ள அறிவுஜீவிகளுக்கும், சில கல்வியாளர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இவர்களது கோரிக்கை தி.மு.க. அரசால் ஏற்கப்பட்டு, 2010-ல்தான் தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி அளவில் ஒரு வகுப்புக்கு மட்டும் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது.

இதுநாள்வரை, சமச்சீர் கல்விக்காகக் குரல் கொடுத்த இவர்கள், தற்போது தங்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தால் அது தவறு. இப்போதுதான் அவர்கள் களத்தில் நின்று காணவும், குரல்கொடுக்கவும் வேண்டிய உண்மையான தேவை மேலதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முழுமையாக அமலுக்கு வந்துள்ளதன் மூலம் மாநில கல்விச் சூழலில் இரண்டு வகையான புதிய நிலைமைகள் இயல்பாக உருவெடுத்துள்ளன.
முதலாவதாக, அனைத்துப் பள்ளிகளும் (சுமார் 45,000 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுமார் 11,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், 25 ஓரியண்டல் பள்ளிகள், 50 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும்) ஒரே பாடத்திட்ட முறைமைக்கு மாறிவிடுவதால், பயிற்றுமொழியைக் கொண்டு, "தமிழ்வழிப் பள்ளிகள்', "தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகள்' என்ற இரு வகையாக மட்டுமே அவற்றை அடையாளப்படுத்த முடியும். ÷அதேபோன்று, பயிற்றுமொழி மட்டும்தான் வேறு, பாடத்திட்டம் ஒன்றே என்பதால், கல்விக் கட்டணம்கூட, தமிழ்வழிப் பள்ளிகளுக்கானவை, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கானவை என்று இரு விதமாக அமைக்கப்பட ஏதுவான நிலைமை உருவாகியுள்ளது.
இரண்டாவதாக, மெட்ரிகுலேஷன் என்பதற்கு வணிக பலம் இல்லாமல் போனதால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறவும், அதுதான் சிறந்த கல்வி என்கிற தோற்றத்தை உருவாக்கவும் தனியார் பள்ளிகள் முயலும். சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாறுவதற்கும், புதிதாக இன்டர்நேஷனல் பள்ளிகளைத் தொடங்கவும் முயலும்.
வசதிபடைத்தவர்கள் தங்களது குழந்தைகளை அதிகமான கட்டணத்தில் வசதியான பள்ளியில் படிக்க அனுப்புவதை யாரும் குறை சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். உரிமையும்கூட. ஆனால், ஓர் ஏழைக் குழந்தைக்கும் அதே தரத்திலான பாடத்திட்டம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கருத்து. அதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கடமையும்கூட. அதற்கேற்ப சமச்சீர் பாடத்திட்டத்தையும், குறைகள் இருப்பின் நீக்கிச் சரி செய்ய வேண்டும் என்பதுடன் கற்பித்தலில் ஆசிரியர்களைப் பொறுப்பேற்கச் செய்வதும் மிகவும் அவசியமாக இருக்கிறது.
ஏனெனில், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற அரசாணை காரணமாக, எந்தவித நிபந்தனையும் கட்டுப்பாடும் இல்லாமல், வகுப்புக்கே வராத மாணவர்களையும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் நிலைமை - குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது. வகுப்புக்கே வராத "ஆல் பாஸ்' மாணவர்கள் 9-ம் வகுப்புக்கு வரும்போது, தமிழைக்கூட படிக்கத் தெரியாதவர்களாக வருகிறார்கள். இவர்களையும் எப்படியோ 10-ம் வகுப்புக்குத் தள்ளிவிடும் வேலையையும் ஆசிரியர்கள் செய்துவிடுகிறார்கள்.
மாணவர் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியர் பணியிடங்கள் குறையும்; இடமாற்றம் நேரிடும் என்பதற்காக, பள்ளிக்கே வராத மாணவர்களையும் வருகைப் பதிவேட்டில் தொடர்ந்து வைத்திருந்து பாஸ் போடுவதும், பாடங்களை நடத்தாமல் இருப்பதும் ஊரகப் பள்ளிகளில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கற்பித்தலுக்குப் பொறுப்பேற்கச் செய்யாமல் பாடத் திட்டங்களை சி.பி.எஸ்.இ.க்கு இணையானதாக, தரமானதாக, சமச்சீராக அளித்தாலும், ஏமாற்றத்துக்கு ஆளாவது ஏழைக் குழந்தைகள்தான்.
பள்ளிகளில் மாணவர்களை மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. தற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள் மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில் தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்.
கற்பித்தல் குறைபாடுகளைக் களையவும், களைய முடியாத நிலையில் அத்தகைய ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரமுள்ள அமைப்பாக பெற்றோர்-ஆசிரியர்- அமைப்போ அல்லது ஏதாவது ஒரு பாரபட்சமற்ற கண்காணிப்பு அமைப்போ செயல்படுவதுதான் இதற்கு ஒரே வழி.
செல்வந்தர் வீட்டுப் பிள்ளைக்குத் தனியார் பள்ளியில் கிடைக்கும் அதே கல்வி, சாதாரண ஏழைக்கும் கிடைக்கச் செய்யும் ஒரே விதமான பாடத்திட்டத்துக்குப் பெயர்தான் சமச்சீர் கல்வியே தவிர, தரம் குறைந்த கல்வித்திட்டமல்ல. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற வகையில், அடித்தட்டு மக்களுக்கும் சர்வதேச அளவிலான தரமான கல்வியை அரசு வழங்குவதுடன், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், தகுந்த ஆசிரியர்களையும் உறுதிப்படுத்துவதன் மூலம்தான் சமச்சீர் கல்வி என்பது உறுதிப்படுத்தப்படும். தனியார் பள்ளியில் கற்பித்தலுக்கு ஆசிரியரைப் பொறுப்பேற்கச் செய்யும்போது, அரசுப் பள்ளிகளில் மட்டும் ஏன் தயக்கம்? இந்தத் தயக்கம்தானே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

சமச்சீர் கல்வி அவசியம். அதே நேரத்தில், கற்பித்தலில் சமநிலையை உறுதிப்படுத்துவதும் மிகமிக அவசியம்.

Sunday 7 August, 2011

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)

மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலதுல் கத்ர் 27வது இரவா?
லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத
பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.


லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)

இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022

இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)
அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.