Wednesday 6 April, 2011

படித்தால் மட்டுமே போதுமா?

இளநிலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள், மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமம் பெற தனியாக ஒரு தேர்வு எழுத வேண்டும் என்று இந்திய மருத்துவக் குழுமம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே, சட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் வழக்குரைஞர் தொழில் செய்வதற்குத் தகுதி பெற, அகில இந்திய அளவிலான பார் கவுன்சில் தேர்வை எழுத வேண்டும் என்று சென்ற ஆண்டு அறிவித்தது. அதே வழித்தடத்தில் இந்திய மருத்துவக் கழகமும் அறிவித்துள்ளது.

சட்டப் படிப்பைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய தகுதித் தேர்வு சென்னையில் நடைபெறவில்லை. சட்டக் கல்வியை முடித்த மாணவர்கள் பெருந்திரளாகப் போராட்டம் நடத்தியதால் இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது, மருத்துவக் குழுமமும் இதேபோன்று தகுதித் தேர்வு நடத்தவுள்ளதாக அறிவிப்பு வந்த நிலையிலேயே சில மருத்துவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இன்னும் நிறைய எதிர்ப்புகள் வரக்கூடும்.
இந்த நடைமுறையை எதிர்ப்பவர்கள் எழுப்பும் ஒரே கேள்வி, "சுமார் 5 ஆண்டுகளாகப் படித்து, தேர்வு எழுதி, தேர்ச்சியுற்று பட்டம் வாங்கிய பிறகு இன்னொரு தகுதித் தேர்வு என்பது, ஐந்து ஆண்டுகள் படித்த படிப்பையே கேலி செய்வதுபோல இருக்கிறது. மீண்டும் ஒரு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றால், அந்த மாணவர் இதுவரை படித்த படிப்புக்கு என்ன அர்த்தம்?' இது நியாயமான கேள்விதான்.
இவ்வளவு எளிமையான, நியாயமான கேள்வியை அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் இந்திய மருத்துவக் குழுமம் அறிந்திருக்காதா? அல்லது அரசுக்கு இதுபற்றிய அக்கறையே கிடையாதா என்று கேட்டால், அவர்களும் சில காரணங்களைச் சொல்கிறார்கள்.
இந்தியா முழுவதிலும் தனியாரால் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு எந்த அளவுக்கு நோயாளிகள் வருகிறார்கள், எந்த முறையில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதெல்லாம் வெறும் காகிதத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாமே தவிர, இவற்றின் தரம் குறித்து பல கருத்து மாறுபாடுகள் உள்ளன.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி இவற்றில் படிப்பை முடித்து வெளிவரும் எல்லா மாணவர்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. ஆகவே, ஓர் அளவுகோல் அவசியமாகிறது. அதற்காகத்தான் தகுதித் தேர்வு நடத்துவதும் அவசியமாகிறது.
ஒரு மருத்துவருக்கான தொழில் உரிமம் என்று மட்டுமே இதை அணுக முடியாது; கூடாது. இது அப்பாவி நோயாளிகளின் உயிருடன் தொடர்புடையது என்பதால் மருத்துவர்களின் தரம் மிகவும் இன்றியமையாதது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், மருத்துவத் தொழில் உரிமம்பெற வேண்டுமென்றால் அதற்கான தனித்தேர்வு எழுத வேண்டும். இந்தியாவிலிருந்து ரஷியா போன்ற வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இங்கே தொழில்புரிய வரும் மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் அவர்களுக்கான சிறப்புத் தேர்வு எழுதியாக வேண்டும். அவர்களும் சுமார் 7 ஆண்டு படித்துவிட்டுத்தானே வருகின்றனர். அவர்களை அப்படியே ஏன் மருத்துவராகத் தொழில்புரிய அனுமதிப்பதில்லை! ரஷியாவில் மருத்துவப்படிப்பு உலகத்தரத்தில் இல்லை என்பதால்தானே!
இந்திய மருத்துவக் குழுமத்தின் இந்த வாதம், எதிர்ப்பாளர்களின் வாதத்தைவிட ஆழமானதாகவும், அவசியமானதாகவும் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இன்றைய சூழ்நிலையில், மருத்துவக் கல்வி என்பது அதிக பணம் கொழிக்கும் தொழில் என்பதாகத்தான் இருக்கிறது. வசதி படைத்தவர்களும், ஏற்கெனவே மருத்துவர்களாக இருப்பவர்களும் தங்கள் குழந்தைகளை மருத்துவர்களாக்கி தங்கள் கார்ப்பரேட் மருத்துவமனையை நிர்வகிக்கச் செய்வதில் ஆர்வம் காட்டுவது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது.
இவர்கள் எத்தனை லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தாகிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கி, தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே ஆர்வத்துடன் படிக்கின்றார்களா? அல்லது தேர்வுகளில் வெற்றி பெறும் உத்திகள் மட்டுமே அறிந்திருக்கிறார்களா என்பது அந்தந்தக் கல்லூரிகளின் தரத்தைப் பொறுத்தது. இந்நிலையில் அவர்கள் படிப்பை முடித்தவுடன் மருத்துவர்கள் என்ற அங்கீகாரத்துடன் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்குவது அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக அல்லவா முடியும்?
அவர் உண்மையாகவே மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றுள்ளாரா, நோயாளியுடன் அவரது அணுகுமுறை எவ்வாறு உள்ளது என்பதைச் சிறு தேர்வு மூலம் சோதித்து அவருக்கு உரிமம் வழங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?
படிப்பும், பட்டமும் மட்டுமே ஒருவர் ஒரு தொழிலில் முழுமையான திறமையுடையவருக்கான தகுதியாக இருக்க முடியாது. படித்துப் பட்டம் பெறும் எல்லா மருத்துவர்களுமே நூறு விழுக்காடு மதிப்பெண் பெற்று வெற்றிபெற்றவர்களா, என்ன? நமது புராதன இந்திய மருத்துவ முறையில் பல ஆண்டுகள் தேர்ந்த வைத்தியரிடம் உதவியாளராக இருந்தவர் மட்டுமே தனியாக வைத்தியம் செய்யும் தகுதியைப் பெறுவதாக இருந்தது. இப்போது ஏட்டுப் படிப்புப் படித்தாலே போதும் என்கிற நிலையில், மருத்துவம் படித்தவர்கள், குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளாவது மருத்துவப் பயிற்சிபெற்ற பிறகு, அவர்கள் தரம் தேர்வு மூலம் பரிசோதிக்கப்பட்டு உரிமம் வழங்குவதுதான் முறையாக இருக்க முடியும்.
மருத்துவர்கள் இவ்வாறு தகுதித் தேர்வில் வெற்றிபெறுவது மட்டுமல்லாமல், குறைந்தது கட்டாயமாக இரண்டாண்டுகளாவது கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினால் மட்டுமே மருத்துவர்களாக அவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர்கள் உயர்படிப்புக்கும் தகுதி பெற்றவர்களாக முடியும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். அரசியல் பின்புலமுடையவர்களால் புற்றீசல்போல தொடங்கப்பட்டு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து, நன்கொடை கொடுத்து மருத்துவர்களாகிவிட முடியும் என்கிற நிலைமையால் ஏற்படும் விபரீதங்களால் பாதிக்கப்படப்போவது அப்பாவி நோயாளிகள். அவர்களைப் பாதுகாப்பதுதான் அரசின் கடமையாக இருக்க முடியும்!

Monday 4 April, 2011

தேர்தல் ஆணையம்

கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வெளிப்படுத்தும் கருத்துகள் திகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. பொறுப்பான பதவியில் இருப்பவர், அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர், தமிழகத்தில் மிக அதிகமான காலம் முதல்வராக இருந்தவர், நிர்வாகம் நன்றாகத் தெரிந்தவர் பேசுகிற பேச்சாக அது இல்லை என்பதுதான் திகைப்புக்கும், அதிர்ச்சிக்கும் காரணம்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும், தமிழகத்தை ஆட்சி செய்வது தனது தலைமையிலான தி.மு.க.தானா இல்லை வேறு யாராவதா என்று தெரியவில்லை என்றும் முதல்வர் பேசியிருப்பதுபோல வேறு யாராவது பேசி இருந்தால், "ஏன் இவர் இப்படியெல்லாம் உளறுகிறார்? இவருக்கு என்னவாயிற்று?' என்று கேட்கலாம். பேசியிருப்பவர் பல முறை முதல்வராக இருந்தவர். நிர்வாகம் தெரிந்தவர். ஆட்சியில் இருப்பவர்.
ஒரு மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதும், தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்பது அதிகாரம் இல்லாத வெறும் காபந்து அரசுதான் என்பதும்கூட, ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவருக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.
""தமிழ்நாட்டை என் தலைமையிலான தி.மு.க. ஆண்டு கொண்டிருக்கிறதா அல்லது தேர்தல் ஆணையம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது'' என்று கூறிவிட்டு, ""தேர்தல் ஆணையத்திடம் மோதிக்கொள்ள விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சட்டப்படி எல்லாம் நடக்க வேண்டும். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை'' என்றும் கூறுகிறார். பிறகு, தேர்தல் ஆணையத்தின்மீது ஆத்திரத்தை உமிழ்வானேன்?
முன்பெல்லாம் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்குக் கெடுபிடிகள் செய்யவில்லை என்றால், அந்த அளவுக்கு விதிமுறை மீறல்களும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடக்காமல் இருந்ததுதான் காரணமே தவிர, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லாதது அல்ல காரணம். அரசியல் சட்டம் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவு 324(1) தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தலை முறையாக நடத்துவதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவது வரை பரவலான, முழுமையான அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
முறையான தேர்தல் நடத்தப்பட முறையான அதிகாரிகள் தேவை. அன்றைய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் முறையாகத் தேர்தல் நடைபெற உதவ மாட்டார்கள் என்று ஆணையம் கருதினால் அவர்களை மாற்றவும், தனது நம்பிக்கைக்குரியவர்களை நியமிக்கவும் ஆணையத்துக்கு அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் 13சிசி பிரிவுப்படி, தேர்தல் கால நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் அத்தனை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும், ஆணையத்துக்குத் தாற்காலிகமாக வழங்கப்பட்ட, ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட ஊழியர்கள்.
போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ போட்டியிட வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியாகப் போட்டியிடுவதை எப்படி ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தினக்கூலித் தொழிலாளியும், கோடீஸ்வரப் பிரபுவும் போட்டியிட வாய்ப்புள்ள தேர்தல் முறையில், பணத்தை விநியோகித்து ஒருவர் வாக்குச் சேகரிப்பதை ஆணையம் எப்படி அனுமதிக்க முடியும்?
முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் விடியோ படமெடுக்கிறது. அப்படிப் படமெடுப்பவரைத் தடுப்பதும், தாக்குவதும் விவரம் இல்லாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய மத்திய அமைச்சருடன் செல்பவர்கள் வட்டாட்சியரை மிரட்டுவதும், விடியோகிராபரைத் தாக்குவதுமாக இருந்தால், ஆணையம் கெடுபிடிகளை மேலும் அதிகரிப்பதில் என்ன தவறு?
மதுரை பாத்திமா கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் நல்ல சில கருத்துகளை மாணவர்களுக்குக் கூறுகிறார். ""நமது வாக்குகள் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பெற்றவை. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். அதேசமயம், அன்பளிப்பு இல்லாத வாக்குப் பதிவு அவசியம். லஞ்சமில்லாத வாக்களிப்பு குறித்து மாணவ மாணவியர் தங்களது பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் கைப்பேசி மூலம் "என்னுடைய வாக்கு விற்பனைக்கல்ல' எனும் வாசகத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று பேசுகிறார்.
மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார் தி.மு.க. அனுதாபி ஒருவர். வாகனங்களைச் சோதனையிடுகிறார்கள், எங்களது சுதந்திரம் தடைபடுகிறது என்று மற்றொருவர் வழக்குத் தொடுக்கிறார். மாவட்ட ஆட்சியர் என்னை மிரட்டுகிறார் என்கிறார் இன்னொருவர். மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்? என்று ஏன் யாரும் முதல்வரிடம் திருப்பிக் கேட்பதில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
காவல்துறை வாகனத்தில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸில் பணம் கடத்தப்படுகிறது. இதையெல்லாம் ஆணையம் தட்டிக் கேட்டால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக முதல்வர் எரிச்சலடைகிறார். வாக்குகள் விலைபேசப்படாமல், வாக்காளர்கள் கவர்ச்சி வாக்குறுதிகளால் ஏமாற்றப்படாமல், முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய முதல்வர், தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்படுவதை நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக வர்ணித்திருப்பது ஒருவகையில் நியாயம்தான்.

நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருப்பது உண்மை. அது யாருக்கு என்பதுதான் கேள்வி...!

Thanks:Dinamani 4-4-11