Tuesday 6 September, 2011

சமுதாயத்தை சீர் செய்ய முயற்சி செய்வோம்

மாற்றம் தேவை சமுதாயத்தை சீர் செய்ய முயற்சி செய்வோம்


நமதூரில் முன்பு பொருளாதார வசதி இல்லாமல் தறி நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி இருந்த காலகட்டத்தில் விரல் விட்டு என்னும் அளவிற்கே நமதூர் நண்பர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று அங்கு இருந்தார்கள். அந்த காலகட்டங்களில் தங்களின் குடும்பத்தாருடன் அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்த தொலைபேசி இணைப்பை அந்த தெருவில் உள்ள சகோதரர்கள் பயன்படுத்தி பேசுவது வழக்கம். அது போல் கடிதப் பரிமாற்றம் மிகவும் முக்கியமானதாகவும், நினைவுகளோடும் இருந்த காலம் அவை. அந்த காலகட்டங்களில் திருமணம் போன்ற குடும்ப விசேசங்களுக்கு நமக்கு தேவையான துணிமணிகளை நமதூரில் உள்ள கடைகள் நமது வீட்டிற்கே கொண்டுவந்து காண்பிப்பார்கள், அதிலிருந்து நமது வீட்டுப் பெண்கள் துணிமணிகளை வாங்கி அணிந்து விசேசங்களை சிறப்பாக செயல்படுத்தினார்கள். அந்த காலகட்டங்களில் ஊர் கட்டுப்பாடுகள், தவறு செய்தால் பஞ்சாயத்தில் கொடுக்கப்படும் தண்டனைக்கு எல்லாம் பயந்து மக்கள் வாழ்ந்தது எல்லாம் நம் கடந்த கால வாழ்க்கையில் மறக்கமுடியாத காலங்கள். அந்த காலங்களில் தவறுகள் மிகவும் அரிதாகவே நடந்தது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் தற்போது நாகரீகம், அறிவியல் மற்றும் பொருளாதாரம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தீமைகளும், தவறுகளும் நம்முடைய வாழ்வில் நாம் நிறையவே பத்திரிக்கைகளின் வாயிலாகவும், செய்திகளிலும் தெரிந்து கொண்டேதான் இருக்கிறோம். இவற்றிற்கு என்ன காரணம், இதை நாம் நாம் எவ்வாறு சரி செய்யலாம் என்ற ஒரு எண்ணம் நம் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. காரணம் என்ன என்று பார்த்தால் செல்போன், தொலைகாட்சி பெட்டிகள், பெண்கள் ஆண்கள் துணை இன்றி வெளியில் செல்வது என்று கூறலாம்.

நம்முடைய சமுதாயத்தை சீரளிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு சில கழுகுகள் நம்முடைய சமுதாயப் பெண்களை வட்டமிட்டுக் கொண்டிருகின்றன. இந்த கழுகுகள் நம் சமுதாயப் பெண்களின் செல்போன் எண்களை ஏதாவது ஒரு வழியில் பெற்று அவர்களுக்கு அடிக்கடி போன் செய்வது, குறுந்தகவல் அனுப்புவது என்று ஆரம்பித்து நம் சமுதாயப் பெண்களை அவர்களின் வலையில் வீழ்த்தி அவர்களை வீட்டில் இருந்து பிரித்து திருமணம் என்ற பெயரில் அவர்களை ஏமாற்றி கற்பை சூறையாடிவிட்டு பின்னர் அவர்களை ஏமாற்றி விட்டு சென்றுவிடுகிறார்கள். இதை அவர்கள் தெரியாமல் செய்யவில்லை, தெரிந்தே நமது சமுதாயத்தை சீரழிக்க திட்டமிட்டே செய்கிறார்கள்.

இதே போலதான் தொலைக்காட்சிகளும் தவறான கருத்துக்களை, தவறான சிந்தனைகளை மக்களிடையே கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதுவும் ஒரு வகையில் காரணம்தான். இதோடு மட்டுமல்லாமல் ஆண்கள் துணையில்லாமல் எந்த பெண்கள் தனியாக கடைவீதிகளுக்கோ மற்றும் வெளிஊர் செல்வதையும் தவிர்க்கவேண்டும். சில கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் தனியாக கடைகளுக்கு செல்லும் பெண்களிடமும், மருத்துவமனைக்கு செல்லும் பெண்களிடமும் ஏதாவது காரணம் கூறி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி அதை தவறாக பயன்படுத்தவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்களே, சகோதரர்களே உங்கள் பிள்ளைகள், அவர்களது நண்பர்கள் யார்? அவர்கள் எங்கே செல்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? வகுப்புகள் நடக்கும் நேரம், வகுப்புகள் நடக்கும் இடம், நடக்கும் நாட்கள், முடிவடையும் நேரம் என்பவற்றை அறிந்து வைத்திருங்கள். உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் குறித்தும் இதே கவனத்துடன் இருங்கள்! அவர்களது தொலைபேசித் தொடர்புகள் எத்தகையவை என்பதையும் கவனம் செலுத்துங்கள்! அதே போல தொலைக்காட்சி மூலம் பரவும் விஷமங்களையும் ,நமது மார்க்கத்தால் தடை செய்யப்பட்டது என்பதையும் அவர்களிடம் கண்டிப்புடன் எடுத்துக்கூறுங்கள். அதே போல நமது வீட்டுப் பெண்களை ஆண்களின் துணை இல்லாமல் தனியாக தனியாக கடைவீதிகளுக்கு மற்றும் வெளிஊர் செல்லக்கூடாது என்று அறிவுறுத்துங்கள். பெற்றோரின் கவனயீனம்தான் அதிகமான பிள்ளைகள் தடம் மாறிச் செல்வதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்பது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவருகிறது. ஆண் துணையில்லாமல் தனியாக வெளிஊர் செல்லும் பெண்கள் உயரக உணவு விடுதியில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் அமர்ந்து தேநீரோ, குளிர்பானங்களோ அருந்துவது நமது சமுதாயத்தை கண்ணிய குறைவாக்கிவிடும். ஆகையால் பெண்களை கணவர் துணையில்லாமல் இதுமாதிரியான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் .

ஆகவே பெற்றோர்களே, சகோதரர்களே முடிந்த வரை நம்முடைய வீட்டுச் சூழலை இஸ்லாமிய மயப்படுத்துங்கள். நமது குடும்பத்தார்களை குர்ஆன் ஓதுவது, தொழுகை, திக்கிர் போன்ற நல்ல அமல்களில் அதிகமாக ஈடுபட வைப்பது நம் அனைவரின் மீதும் கடமையாகும். இந்த விசயத்தில் நாம் அனைவரும் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும், நம் குடும்பத்தார்களையும், நம் சமுதாய மக்களையும் சைத்தானின் கெடுதிகளை விட்டும், அநியாயக்காரர்களின் சூழ்சிகளை விட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்.



No comments:

Post a Comment

welcome