Wednesday 7 September, 2011

பற்றாக்குறை பட்ஜெட் தவறல்ல!!


நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், அவருடைய கவலை விலைவாசி உயர்ந்தது குறித்தோ, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவது குறித்தோ, நடுத்தர வர்க்கமும் ஏழை எளிய மக்களும் அன்றாடச் செலவுகளையே சமாளிக்க முடியாமல் திண்டாடி வருவது குறித்தோ இருந்தால் அது நியாயம்.

மாறாக, அவருடைய கவலையெல்லாம் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயரும் அளவுக்கு இந்தியாவில் விலையை உயர்த்த முடியவில்லையே என்றும் கெரசின், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் உணவு தானியங்களின் சாகுபடிக்கும், விவசாயத்துக்குப் பயன்படும் உரங்களுக்குமான மானியச்செலவு அதிகமாகிக் கொண்டே போகிறதே என்று இருக்கும்போது நாமும் கவலைப்படுகிறோம், நம்மைப் பற்றிச் சிந்திக்க யாருமே இல்லையா என்று.

மத்திய அரசின் வருவாயைவிட செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது, பற்றாக்குறை அளவு பெரிதாகிக்கொண்டே வருகிறது என்பதால் சில சிக்கன நடவடிக்கைகளை கண்டிப்புடன் எடுக்கத் தொடங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார் அவர்.

அந்த நடவடிக்கைகள் என்னவென்றால் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன, வீண் செலவுகள் செய்யக்கூடாது என்று எல்லா அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது, புதிதாக கார்கள், ஜீப்புகள், வேன்கள் வாங்க வேண்டாம் என்று எல்லா துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன; 5 நட்சத்திர ஹோட்டல்களில் கருத்தரங்குகள், சந்திப்புகள், துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இவற்றையெல்லாம் எந்தத் தடையுமின்றி இவர்கள் செய்துவந்தார்கள், இப்போதுதான் நிறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்று இதிலிருந்து புலனாகிறது. இப்போதாவது நல்ல புத்தி வந்து நிலைமை தெரிந்து செயல்பட முடிவெடுத்திருக்கிறார்களே, அதுவரை மகிழ்ச்சி.

இந்தக் கட்டுப்பாடுகளும் சிக்கன நடவடிக்கைகளும் வெறும் கண் துடைப்புதான் என்பதைக் குழந்தைகூடச் சொல்லிவிடும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது வீரர்கள் பயன்படுத்துவதற்காக குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், கட்டில்கள், சேர்கள், நாற்காலிகள், கூடாரத் துணிகள், உடற்பயிற்சிக் கருவிகள் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்த தொகையையும் விலைக்கு வாங்கிய தொகையையும் படிக்கப்படிக்க ரத்தம் கொதிக்கிறது. அதே பொறுப்பற்ற தன்மை அரசின் அன்றாட நிர்வாகத்திலும் குறைவறவே நிலவுகிறது. இந்த அளவுக்கு ஊதாரித்தனத்தையும் ஊழலையும் அனுமதித்துவிட்டு சிக்கன நடவடிக்கைகள் குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிப்பளுவுக்கு ஏற்ப இரண்டாவது, மூன்றாவது, நான்காவது நிலைகளில் ஊழியர்களை நியமித்து ஆண்டுகள் பலவாகின்றன.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவத் தொழில்நுட்ப ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை பெரும் அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ரயில்வே துறை, பொதுப்பணித்துறை, பாசனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ராணுவம், அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த பணிகள், மின்சார உற்பத்தி நிலையங்கள், தகவல் தொடர்புத்துறை என்று எல்லா இடங்களிலும் வேலை செய்வதற்கு ஆள்கள் இல்லாமல் இடைநிலை அதிகாரிகள் திண்டாடித்தான் வேலைகளை முடிக்கின்றனர்.

இந்த நிலையில் புதிய பதவிகள் வேண்டாம், புதிய ஆள்களை நியமிக்க வேண்டாம், விடுப்பில் ஊழியர்கள் சென்றால் அந்த இடத்துக்குத் தாற்காலிக நியமனம் வேண்டாம் என்றெல்லாம் தடுத்து, அதில்தான் இந்த நாட்டின் பணப் பற்றாக்குறையே அதிகரித்துவிட்டதைப் போல மாய்மாலம் காட்டுவது எதற்காக?

வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு எந்தத்துறையைத் திறந்துவிடலாம், இந்தியாவில் முதலீடு செய்கிறவர்கள் தங்களுடைய லாபத்தைச் சேதாரம் இல்லாமல் இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல என்னென்ன சலுகைகளை வழங்கலாம், இந்திய கனிம வளங்களை அகழ்ந்தெடுத்து கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க எந்தப் பன்னாட்டு நிறுவனத்தை அனுமதிக்கலாம் என்றெல்லாம் சிந்திக்காமல், இந்தியாவின் வளத்தை எப்படிப் பெருக்கி இந்தியர்களின் வருவாயை உயர்த்தலாம், வேலைவாய்ப்பை எப்படிப் பெருக்கலாம், தேவையற்ற பெட்ரோல், டீசல் பயன்பாட்டையும் விரயத்தையும் தடுக்க பொதுப் போக்குவரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்றெல்லாம் பிரணாப் முகர்ஜிகளும் மன்மோகன் சிங், மான்டேக் சிங்குகளும் சிந்தித்தால் நல்லது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இந்த நாட்டின் பட்ஜெட், பற்றாக்குறையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் மட்டும்தான் வரவும் செலவும் சமமாக இருக்கும்வகையில் சமநிலை பட்ஜெட் தாக்கல் செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதும் அதனால் விலைவாசி உயரும் என்பதும் பொருளாதாரத்தின் அரிச்சுவடிப் பாடம். அதேநேரத்தில், வெளிநாடுகளிலிருந்தும், சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்தும் கடன் வாங்குவதாலும், அளவுக்கு அதிகமாக ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதாலும்கூடப் பணவீக்கம் அதிகரிக்கும்தான்.

ஆனால், இப்படி அதிகமாக அச்சடிக்கப்படும் பணமோ, வாங்கப்படும் கடனோ ஊதாரிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படாமல், வளர்ச்சிப் பணிகளுக்காகச் செலவிடப்படுமானால், அது தொலைநோக்குப் பார்வையுடன் செய்யப்படும் முதலீடாக அமையும். நமது "நவரத்னா' என்று அழைக்கப்படும் அரசுத்துறை நிறுவனங்களும், பல்வேறு நீர்மின் நிலையங்களும், உருக்கு ஆலைகளும் இந்த வகையைத்தான் சாரும். பண்டித ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் அப்படிச் செய்யப்பட்ட முதலீடுகள்தான் இன்று இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதை நாம் மறந்துவிடலாகாது.தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும்போது, பற்றாக்குறை பட்ஜெட் தவறல்ல!

உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் கூறுவதே வேத வாக்கு என்று எண்ணி நாட்டைச் சீர்குலைக்காமல், முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு காட்டிய தனியார் துறையும் அரசுத் துறையும் அதனதன் பங்களிப்பை நல்கும் கூட்டுப் பொருளாதாரத்துக்குத் திரும்புவதுதான் இன்றைய பிரச்னைகளுக்குத் தீர்வு.

அதை ஆட்சியாளர்கள் புரிந்து நடந்துகொண்டால் அது அவர்களுக்கும் நல்லது, அவர்களை ""வாழவைக்கும்'' இந்த நாட்டுக்கும் நல்லது.

No comments:

Post a Comment

welcome